இறுதி சுற்று படம் பற்றிய விமர்சனத்தை நான் இங்கு எழுத முயற்சிக்கவில்லை. ஆகையால் நீங்க அதை தேடி இந்த பக்கத்திற்கு வந்து இருந்தால் என்னை மன்னிக்கவும். ஒரு படத்திற்கு எதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கேள்வி பலரில் உள்ளது. நான் கல்லூரியில் நுகர்வோர் மனநிலையும் அவர்களுடைய குணம் பற்றி பாடம் எடுக்கின்றேன், அந்த வகுப்பில் நான் கலாச்சாரம் அதை ஒட்டிய வணிகம் என்ற தலைப்பை பற்றி பேசும் பொழுது, திரைப்படம் ஒரு பங்கு வகிக்கின்றது. என்ன அது? . ஒரு ஊரின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள வேண்டும் எனில், அந்த ஊரில் இருக்கும் மக்களை நன்கு அறிந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் பார்க்கும் ஊடகங்களை நன்கு ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும். அந்த ஊடகம் நிச்சயமாக மக்களின் கலாச்சாரத்தை வெளிபடுத்தும் என்பது தான் அந்த பாடத்தின் முடிவு. ஆக ஒரு படம், கலாச்சார சீர்கேட்டை பதிக்கும் ஆயின் பிற்காலத்தில் அவை தான் தமிழ் நாட்டின் கலாச்சாரம் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள் நம் சந்ததியினர்.

சரி, இப்பொழுது படத்தை பற்றி. படம் பார்த்த பிறகு என்னுள் சில சிந்தனை ஓட்டம், ஒரு ஆசிரியனை (பயிற்சியாளரை) சுதா அவர்கள் சித்தரித்த விதம் எனக்கு பிடித்து இருந்தது. என்னவெல்லாம் பிடித்திருந்தது என்று பார்ப்போம்.

irudhi-suttru

ஒரு நல்ல ஆசான் ஒரு மாணவனின் திறமையை கண்டறிவான். திறமை இருக்கும் மாணவனின் வெற்றிக்காக அந்த ஆசான் முழு முயற்சி எடுப்பார். இந்த படத்தில் ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் அதை வெளிக்கொண்டு வந்திருப்பார் சுதா. ஒரு படைப்பின் ஆழத்தை உணர முடிந்தது.

அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த ஆசான் என்றும் எவனுக்கும் அஞ்சுவதில்ல. உண்மையும் கூட, நான் படித்த கல்லூரியில் பேராசிரியர் சுவாமிநாதன் அவ்வாறுதான் இருப்பார். கற்று சிறந்த ஆசிரியன் என்றும் தலை குனிவதில்லை.

ஒரு மாணவன் என்றும் ஆசிரியரின் பக்கம் இருந்து சிந்திப்பதில்லை, ஆக ஆசிரியன் சொல்வது எதற்கு என்ற ஆராய்ச்சியை அவன் செய்வதில்லை. ஆனால் ஒரு சிறந்த ஆசிரியன், நிச்சயமாக அவன் சொல்லும் வேலையில், நிச்சயம் மாணவன் பயனடையும்படி ஆக்கபூர்வமான வேலையை தான் கொடுத்து இருப்பான் என்பதை படத்தின் எல்லா பயிற்சி காட்சிகளில் பதிவு செய்து இருக்கின்றனர்  பட குழுவினர். மாதவன் பணம் கொடுப்பதில் இருந்து, மாணவிகளை தன்னுடன் அழைத்து செல்லும் வரை அந்த பயிற்றுனர் என்னவற்றை செய்கின்றார் என்பது புரியாமலேயே இருக்கும் அந்த மாணவிகளுக்கு.

சிறந்த ஆசிரியரை சுற்றி என்றும் பலவிதமான பிம்பங்கள் இருக்கும், மாதவனை பெண்களை வசியம் செய்பவன் என்றும், குடிகாரன் என்றும் பட்டம் சூட்டி இருப்பார்கள். நல்லவருக்கு இங்கு காலம் இல்லை. ஆகா ஒரு ஆசிரியரின் வாழ்கை கூட அப்படி தான். மாணவிகள் வந்து பேசினால் , சக ஆசிரியர்கள் கூட அந்த நல்ல ஆசிரியரை தரம் குறைவாக பேசும் காலம் இது. ஆசிரியனும் சக மனிதன் தானே, அவனுக்கு உணர்ச்சிகள் இருக்க கூடாதா ?. ஆசிரியன் என்றும் மாணவர்களை தங்களின் பிள்ளைகளாக தான் பார்க்கின்றனர் என்பதை உணர்த்தி இருப்பார்கள் இந்த படத்தில்.

கொடுங்கோலன் போலவே காட்சி அளிப்பார் மாதவன் இந்த படம் முழுவதும். செம்மையான பயிற்சியை கொடுக்க நினைக்கும் எந்த ஆசிரியனும் கொடுங்கோலன் போல தான் நடந்து கொள்வர். ஏன் அவ்வாறு, அவன் சிறந்த மாணவனை உருவாக்க வேண்டும் என்று நினைகின்றான், அந்த முயற்சியில் மாணவர்கள் தடம் மாறி செல்கையில் ஆசிரியன் கோவம் கொள்கின்றான். பாதுகாப்பு கவசத்தை கீழே இரக்க வேண்டாம் என்று பல முறை கூறி இருப்பார் மாதவன், ஆனால் அதை மீறி செயல் படும் மாணவியை அடிப்பார். தவறை உணர்த்த வேண்டிய கட்டாயம். ஆக நல்ல ஆசிரியன் எல்லோருக்கும் கொடுங்கோலன் போலவே காட்சி அளிப்பான். அதில் இருந்து சற்று விலகி போனால் அனைத்தும் வீண். நல்ல மாணவன் உருவாக வாய்ப்பு இருக்காது.

மாதவன் துணிந்து  மாணவர்களுக்காக செலவு செய்வார் படத்தில். இது எல்லாராலும் முடியாது என்றாலும், ஒரு தலை சிறந்த ஆசிரியன் பணத்தை மதிப்பதில்லை, அவன் அவனுடைய திறமையை மட்டுமே மதிக்கின்றான். வணிக ரீதியான உலகத்தில் எல்லா ஆசிரியர்களாலும் பணத்தை மாணவர்களுக்காக செலவு செய்ய முடிவதில்லை. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களை  கிள்ளு கீரையாக பார்க்கும் பண வெறி பிடித்த முதலாளி வர்க்கம், நிச்சயமாக ஆசிரியனின் அற்பணிப்பை பாராட்டி சம்பளத்தை உயர்த்த போவதில்ல. ஆகையால் ஆசிரியன் மாணவர்களுக்கு செலவு செய்ய தயங்க தான் செய்கின்றார்கள்.

நல்லதொரு மாற்றம் கொண்டு வர சிறந்த ஆசிரியர்களால் முடியும், ஆனால் மாணவர்கள் ஆசிரியரோடு கை கோர்த்து வரவேண்டும். படம் என்றும் பொழுது போக்கிற்காக அல்ல. ஒரு படத்தை பார்க்க வேண்டிய கண்ணோட்டத்தை நிச்சயம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி இந்த பதிவை முடிவு செய்கின்றேன்.

மனதை வருடிய இன்னும் ஒரு படம் “விசாரணை” , படத்தை பற்றி அல்லாமல் படத்தை உருவாக்க காரணமாக இருந்த சந்திரகுமார் அவர்களுடைய “லாக் அப்” புத்தகத்தை பற்றி அடுத்த பதிவில் காண்போம். நன்றி.

 

Advertisements